உங்களுக்காக எப்போது வாழப்போகிறீர்கள்? சௌந்தர மகாதேவன்
உங்களுக்காக எப்போது வாழப்போகிறீர்கள்?
பேராசிரியர் சவுந்தர மகாதேவன்,தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா
கல்லூரி, திருநெல்வேலி, 9952140275
காலில் சக்கரம் கட்டிக்கொண்ட மாதிரி வாழ்க்கை
முழுக்க ஒரே ஓட்டம், எந்தநேரம் பார்த்தாலும் செக்குமாடு மாதிரி ஏதோவொரு உழைப்பு,
நாம் கடிகாரம் கட்டியிருந்தோம் என்பதைவிட நம்மைக் கடிகாரம் கட்டிக்கொண்டிருந்ததோ
என்று எண்ணுமளவுக்குப் பரபரப்பான வாழ்க்கை, வேண்டிய மட்டும் பணம்
சம்பாதித்தாகிவிட்டது. பங்களா, கார், வங்கிக் கையிருப்புகள் எல்லாம் உண்டு! மகன், மகள் எல்லோருக்கும் திருமணம்
செய்தாகிவிட்டது. நம் தேவைகள் எல்லோருக்கும் போதும் என்றாகிவிட்டது, கட்டடம் கட்டி
முடித்தவுடன் கழற்றி ஓரமாய் வைக்கப்படும் சாரக் கம்புகளைப் போல் நம் பிள்ளைகளுக்கே
நாம் பாரமாகிப் போய்விட்டமோ என்கிற நினைப்பு கூட இப்போதெல்லாம் அவ்வப்போதுவந்து தலைதூக்கத் தொடங்குகிறது.
யார் துணை?
எப்போதும் ஏதோவொரு வெறுமை! எதையோ இழந்த உணர்வு!
இன்னும் ஏன் எதைநோக்கியோ பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற அசதி தோய்ந்த
கேள்விகள் சிலருக்குத் தலைதூக்கலாம். வீறுகொண்டு எழவோ சிகரம் நோக்கி நடக்கவோ
நினைக்காவிட்டாலும் நம் தேவைகளை வேறு யார் துணையின்றி நிறைவேற்றவாவது வேண்டுமே
என்கிற பதற்றமும் பயமும் உள்நிரம்பி மாத்திரைகளின் உதவியோடு யாத்திரைகள் நடத்திக் கொண்டிருக்கும்
சூழலும் இந்தக் காலகட்டத்தில்தான் வருகிறது. மகனும் மகளும் வெளிநாட்டில் இருக்க
ஈரம் கசியும் கண்களில் ஓரம் கசியும் கண்ணீரோடு கணவனும் மனைவியும் ஒருவருக்குத்
துணை ஒருவராக வாழும் நாட்களும் இப்போதுதான்.
இன்னும் நாம் வாழத் தொடங்கவில்லையோ?
அதிவேகமாய் ஓடிமுடித்தபின் பின்னோக்கித்
திரும்பிப் பார்த்தால் நமக்காக நாம் எதுவுமே செய்யவில்லையோ? நமக்கான வாழ்வை
இன்னும் நாம் வாழத் தொடங்கவில்லையோ? என்ற
கேள்வி உள்ளுக்குள்ளிருந்து குடைந்தெடுக்கத் தொடங்குகிறது. பொறுப்பு நெருப்பாய்
நின்று நம்மை நமக்காக வாழவிடாமல் மற்றவர்களுக்காகவே வாழவைத்துவிட்டது. நமக்குப்
பிடித்ததைச் செய்து, நமக்குப் பிடித்ததை உண்டு, நமக்குப் பிடித்ததைப் படித்து
நமக்குப் பிடித்த வாழ்க்கையை எத்தனை நாள் வாழ்திருக்கிறோம்? என்ற கேள்வியைக்
கேட்டுப்பாருங்கள்! வரும்பதில் வருத்தம் தோய்ந்ததாகத் தானிருக்கும்.
பிறந்துவளர்ந்த வீட்டை ஒரே நாளில் காலிசெய்துவிட்டு இன்னோர் இடத்திற்குப்
போனபின்னும் மனம் எப்படி அந்தவீட்டைச் சுற்றியே அலைபாய்ந்து கொண்டிருக்குமோ
அதேபோல் மனம் நிம்மதி தேடும் தினத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது.
கலங்காதே இது உன்காலம்
நம்
வாழ்நாளில் நாம் சந்தித்த எத்தனை உறவுகள் நம் இறுதிமூச்சு வரை நம் கட்டிலுக்கருகே
காத்திருக்கப் போகின்றன! அவரவர் தேவை முடிந்தபின் அவரவர் நிறுத்தங்களில் அவரவர்
நாசூக்காக ஏதோவொரு வார்த்தை சொல்லி இறங்கிக் கொள்ள, நாம் மட்டும் நரைகூடித்
தனியாகப் பயணிக்கும் இந்தக் காலம் எப்படிப்பட்டது? செல்பேசியை எடுத்த உடன் கொரானா
வைரஸ் விளம்பரத்தில் இருமுகிற இருமல்
கேட்டுப் பீதியாகி நமக்கும் இருமல் வருகிற இந்த மூப்பு பருவத்தில் “கலங்காதே
இது உன்காலம்” என்று கைப்பிடித்து இந்த வாழ்வு புதியபாதை நோக்கித் திருப்பும்போது
சற்று பயம்கலந்த வியப்பாக இருக்கிறது.
வாழத் தொடங்குகிறீர்கள்!
பணிக் காலத்தில் எத்தனையோ உறவினர்கள் வருந்தி
வருந்தி அழைத்தும் இல்லவிழாக்களுக்குச் செல்லாத நீங்கள், இப்போது என்று அந்த இனியநாள்
வரும் என்று முன்னதாகக் கிளம்பத் தயாராக இருப்பீர்கள். நம் வயதையொத்த நண்பர்கள்
உறவினர்களோடு கைகளைப் பிடித்துக்கொண்டு ஊர்க்கதைகள் உலகக்கதைகள் பேசமாட்டோமா?
பொக்கை வாயைத் திறந்து குழந்தையாகச் சிரிக்கமாட்டோமா என்று அப்போது எண்ணத் தோன்றும்.
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் நேரம் கொடுமையானது என்று ஒருவர் பேச்சில்
மற்றவர் உணர்ந்திருப்பீர்கள். அன்று வேலை அவசரத்தில் அரக்கப் பறக்க அள்ளிப்
போட்டுக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்ற நீங்கள், இப்போது மிக அமைதியாகப்
பால்கனியில் அமர்ந்துகொண்டு உங்கள் தெருவிலிருந்து பள்ளிக்குச் செல்லும் எல்லாக் குட்டிக்
குழந்தைகளுக்குப் புன்னகையோடு கையசைத்துக் கொண்டிருப்பீர்கள்.
ரசித்து வாழத் தொடங்குவீர்கள்!
நிலைமாறும் உலகில் நிலைப்பது பணம் சேர்ப்பது ஒன்றே என்று இரவுபகல்
பார்க்காமல் உழைத்துக் களைத்த நீங்கள் நீங்கள் தவறவிட்ட ஒவ்வொரு சின்ன
விஷயத்தையும் ரசித்துரசித்துச் செய்துகொண்டிருப்பீர்கள். புத்தம் புதுக்காலையின்
அடையாளமாய் திகழும் காகிதமணத்தோடும் அச்சு மைமணத்தோடும் வரும் செய்தித்தாளை ஒரு
வரிவிடாமல் வாசித்துக்கொண்டிருப்பீர்கள், அதில் நல்ல கட்டுரைகள் ஏதேனும் வந்தால்
நூற்றுக்கணக்கில் பிரதிகள் எடுத்து பூங்கா நண்பர்களுக்குத்
தந்துகொண்டிருப்பீர்கள். அதுவரை வாகனத்திலேயே பயணித்துக் கொண்டிருந்த நீங்கள் பண்ணையில்
பால் வாங்குவது முதல் ரேசன்கடை அரிசி வாங்குவது வரை யாவற்றையும் நடந்தே வாங்கி
ஆசுவாசமாய் நடப்பதன் சுகத்தை அறிந்திருப்பீர்கள்.
உலகம் ஒருநாளில் மெதுவாய் சுற்றத் தொடங்கிவிட்டதோ
என்கிற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கும். மாலைநேரக் குளக்கரைக் காற்று, வானொலிச்
செய்தி, நடைபாதைக் கடைத் தேநீர் அருந்தல், வாசகசாலை நூல்கள் வாசிப்பு, திருவிழா
நாட்களில்கூடக் கோவிலுக்கு ஒதுங்காத நீங்கள் பூஜைபுனஸ்காரம் என்று ஆளே
மாறியிருப்பீர்கள், உங்களின் வண்ணவண்ண மிடுக்கான உடைகள் இளநிறத்திற்கு எளிமையாக
மாறியிருக்கும்.
பாசம்
பணிநெருக்கடியில் உங்கள் குழந்தைகளைக் கூடக்
கொஞ்சாமல் வளர்த்த நீங்கள் இப்போது உங்கள் பேரன் பேத்திகளுக்கு யானைகளாகக்
குதிரைகளாக, அவர்களை உப்புமூட்டை சுமக்கும் செல்ல தாத்தா பாட்டிகளாக மாறியிருப்பீர்கள்.
அவர்கள் பிஞ்சுக் கைகளால் நிறைய அடிவாங்கிக் கொண்டிருப்பீர்கள். அவர்களின்
நண்பர்களின் நண்பர்களாய் மாறி அவர்களுக்குத் தினமும் கதை சொல்லிக்
கொண்டிருப்பீர்கள், எப்போதும் உங்கள் பைகளில் அவர்களுக்கான சாக்லேட்டுகளும்
பிஸ்கட் பாக்கெட்டுகளும் இருந்துகொண்டே இருக்கும். இருசக்கர வாகனத்தில் அவர்களைக்
கொண்டுவிட்டும் கூட்டிவரவுமே ஒவ்வொரு நாளும் விடிகிறது என்று எண்ணி உற்சாகமாய்
பள்ளிச் சிறுவர்கள்போல் அவர்களின் பள்ளி வாசலில் நின்றுகொண்டிருப்பீர்கள்.
விதவிதமான பண்டம் பலகாரங்களை அவர்களுக்கு
ஞாயிற்றுக் கிழமைகளில் செய்துதந்துகொண்டிருப்பீர்கள். உங்கள் மகனோ மகளோ அவர்களை
அடிப்பதையோ திட்டுவதையோகூடத் தாங்கிக்கொள்ளமுடியாமல் நீங்கள் பெறாத
அப்பிள்ளைகளுக்காக, நீங்கள் பெற்ற பிள்ளைகளிடம் சண்டையிட்டுக்கொண்டிருப்பீர்கள்.
அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று
கோவில்கோவிலாய் அர்சனை செய்துகொண்டிருப்பீர்கள். ஆன்மிகத் தலங்களுக்குச்
செல்லவேண்டும் என்று ஆச்சியும் ஐயரும் காசி, கயா, பத்ரிநாத், கேதார்நாத், ஷீரடி,
ஜெருசல்ம், மெக்கா மதினா என்று கிளம்பிச் சென்றுகொண்டிருப்பீர்கள்.
திருமணமான புதிதில்கூட வராத பாசமும் நேசமும்
கணவன் மனைவியிடம் இப்போது வந்திருக்கும். யாரையும் எதுவும் சொல்லவிடாத
பாதுகாப்பாளர்களாக மாறியிருப்பீர்கள். சீரியல் பார்த்தால் முன்பு கோபப்பட்டு
எரிந்துவிழுந்த நீங்கள், இப்போது ஒருசீரியல் விடாமல் பார்த்துச் சிரித்துக்
கொண்டிருப்பீர்கள்.
உன் கண்ணில் நீர் வழிந்தால்
இருபத்தைந்து வயதில் இன்னும் விமர்சையாகத்
திருமணத்தை நடத்தியிருக்கலாமோ என்ற நெடுநாள் குறையை நீக்கும் வண்ணம் பேரன்
பேத்திகளின் கிண்டல் குரல்களோடு திருக்கடையூரில் அறுபதாம் எழுபதாம் எண்பதாம்
கல்யாணத்தில் உணர்ந்து ரசித்து கைகள் நடுங்கத் தாலிகட்டிப் பூரித்திருப்பீர்கள். அமைதியாக அமர்ந்தபடி திருமண ஆல்பத்தின் ஒவ்வொரு
பக்கங்களுக்குள்ளும் பலமணிநேரம் கழித்து மகிழ்ந்திருப்பீர்கள். மனைவிக்கு ஒன்று
என்றால் கணவனும், கணவனுக்கு ஒன்றுஎன்றால் மனைவியும் துடித்துப் போவதும்
இப்போதுதான் நிகழும்.
அகக்கண்
அறுபதுவயதுக்குப் பின்தான் அனுபவம் எனும்
அகக்கண் நமக்குத் திறக்கிறது. அக்கண் கொண்டு பார்க்கும்போது அதுவரை நம் பார்வையில்
குற்றவாளிகளாகத் தெரிந்தவர்கள், அதன் பின் அன்பாளர்களாகவும், சுயதேவைகளுக்காகவும்
சொத்து சுகங்களுக்காகவும் நம்மோடு ஓட்டிக்கொண்டு பசப்புவார்த்தைகளைச் சொல்லித்
திரிந்தவர்கள் அதன்பின் வம்பாளர்களாகவும் தெரியத் தொடங்குகிறார்கள்.
புரிதல்
வாழ்க்கை! நாம் வாழக் கொடுத்த நல்வாய்ப்பு, அதை எப்படி
வாழ்ந்தோம் எஎன்பது இப்போது நமக்கு நன்றாகப் புரிந்திருக்கும். வாழவேண்டும் என்று
முயன்றோமே தவிர இன்னும் வாழவே தொடங்கவில்லை என்கிற உண்மை புரியத்தொடங்குவதும்
இப்போதுதான். எல்லாவற்றையும் இழந்தபின் வாழ்க்கை தரும் மறக்கமுடியாத பரிசு
அனுபவம்தான் என்பதை நாம் வாழ்ந்த வாழ்க்கை இன்னேரம் நமக்கு உணர்த்தியிருக்கும்.
நம்மீது அன்பு செலுத்திய எத்தனை அன்பு உள்ளங்களைப் புரிந்துகொள்ளாமல் நாம்
அவர்களைப் புறக்கணித்திருப்போம் என்பதை இந்த மூப்புநாட்கள் நமக்கு உணர்த்தியிருக்கும்.
எல்லாம் அவன் செயல்
நான் என்பது ஒன்றுமே இல்லை, எல்லாமே அவன்தான்! அவன்
நடத்தவேண்டிய நாடகத்தை யார் வந்து தடுத்தாலும் மெல்லச் சிரித்தபடி அவன் நடத்திக்
காட்டிக்கொண்டே நகர்கிறான், “அவனருள் இன்றி இந்த உலகில் ஓர் அணுவும் அசையாது”
என்று நம்மைப் படைத்தவனை முழுமையாகப் புரிந்துகொண்டு அவனைய சரணாகதியடைவதும் இந்தக்
காலகட்டத்தில் தான்! வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்கள் தோறும் வேதனை
இருக்கும், வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை, எதையும்
தாங்கும் இதயமிருந்தால் இறுதிவரைக்கும் அமைதியிருக்கும் என்று கவியரசர் கண்ணதாசன்
சொன்ன பேருண்மை புரிந்திருக்கும். நாம் நாமாக இருந்தால் இந்த வாழ்க்கை மிக அழகாக
இருக்கும், நமக்கான நம் வாழ்வை இனிவாழ்ந்தால்கூடச் சுகமாகத்தானிருக்கும்.
மகிழ்ச்சி இருக்கும் இடமே சொர்க்கம்
ஒரு குரு வேதாந்த சித்தாந்தங்களை அழகாக
விளக்கிக் கொண்டிருந்தார். ஒரு சீடன் எழுந்தான், குருவே எது சொர்க்கம்? எது நரகம்?
என்று கேட்டான். எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் தன் சீடனை அவர்
ஆசிரமமுற்றத்தில் அவர் புதிதாய் வாங்கி வைத்த கண்ணாடி மாளிகைக்குள் அனுப்பினார்.
உள்ளே நுழைந்தான் அந்தப் புன்னகைச் சீடன், நான்கு பக்கமும் ஆளுயரக் கண்ணாடிகள்,
சிரிப்பு சிந்தும் தன் முகத்தை எங்கு நோக்கினும் காண அவனுக்குப் பெருமகிழ்ச்சி.
வெளியே ஓடிவந்தான், குரு கேட்டார், “நீ இப்போது எங்கிருந்து வருகிறாய்” என்று, அவன்
சொன்னான், “குருவே நான் சொர்க்கத்திலிருந்து வருகிறேன்” என்றான்.
அடுத்து எப்போதும் கடும்கோபம் கொண்டு
அடுத்தவர்களைத் திட்டித் திரியும் ஆவேசவெறி பிடித்த இன்னொரு சீடனை அந்தக் கண்ணாடி
மாளிகைக்குள் அனுப்பினார். ஆவேசமுகத்தோடு அந்தக் கண்ணாடி அறைக்குள் நுழைந்தான்
அந்தச் சீடன், எங்கு நோக்கினும் சினம் கக்கும் அவன் ஆவேசமுகங்கள் அடுக்கடுக்காய்
தெரிய, தன் முகத்தைத் தானே காணச் சகியாது
சிலநிமிடங்களில் வெளியே ஓடிவந்தான். “சீடனே! நீ இப்போது எங்கிருந்து வருகிறாய்?”
என்று கேட்டார், “குருவே நரகம் போன்ற ஒரு இடத்திலிருந்து வருகிறேன்” என்றான். குரு
சொன்னார், சொர்க்கம் என்பதும் நரகம் என்பதும் நம் மனம் உருவாக்கும் மாயபிம்பங்களே
அன்றி வேறில்லை. சிரித்த நிமிடங்களில் நாம் சொர்க்கத்திலும், சினம் பொங்கும்
நிமிடங்களில் நாம் நரகத்திலும் இருக்கிறோம். சிரிக்க சிரிக்கப் பல ஆண்டுகள் நம் ஆயுள்
நீள்கிறது. சிரித்தபடி வாழலாம், இன்னும் இளமையாக்கும் முதுமையும் ஓர் இனிய வரமே!


Comments
Post a Comment