தினமலர் என் பார்வை
மீண்டு வருவோம் கவலை வேண்டாம்
முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275
பேரிடர் பாரதத்தை அழுத்தினாலும் மீண்டு வருவோம் என்கிற நம்பிக்கை நம்முள் துளிர்க்கிறது. இந்தக் கொரோனா நாட்கள் நிறைய இழப்புகளையும், நிறைய இறப்புகளையும் உலகிற்கிற்குத் தந்து நம்மை வீட்டுக்குள் முடக்கினாலும் தண்ணீர் வாளிக்குள் அமிழ்த்திய பந்து எப்படி அமிழ்த்திய கரங்களைத் தள்ளிக்கொண்டு மேலே வருமோ அவ்வாறு மேலே வருவோம் என்கிற நம்பிக்கையையும் தந்திருக்கிறது.
நம்பிக்கைதானே வாழ்க்கை:
1876 முதல் 1878 வரை தொடர்ந்த தாது வருஷத்துப் பஞ்சத்தாலும் அது தந்த பசிபட்டினியாலும் கொடிய நோயாலும் இந்தியாவில் ஐம்பதுலட்சம் மக்கள் இறந்தார்கள். 1900 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியின் விளைவாய் உண்ண உணவில்லாமல் 3.25 மில்லியன் மக்கள் இறந்தார்கள்.
1943 இல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் தொற்றுநோயாலும் 3.5 மில்லியன் மக்கள் இறந்தார்கள்.
2004 இல் நம் வாழ்நாளில் கண்டறியாத மிகப் பெரிய நிலநடுக்கத்தை இந்தியப் பெருங்கடலில் கண்டோம், ரிக்டர் அளவுகோலில் 9.3 என்று காட்டப்பட்ட ஆழிப்பேரலையால் சுனாமி ஏற்பட்டு இந்தியா சந்தித்த பேரழிவில் லட்சக்கணக்கான மக்களை இழந்தோம்! 2005 இல் காஷ்மீர் நிலநடுக்கமும் அவ்வாறுதான்.
கண்ணீர்த்துளிகள் ஒரு பக்கம் வழிந்தாலும் இந்தியா அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டு மீண்டுவரவில்லையா? எல்லா இடர்களிலிருந்தும் மீண்டு வருவோம்.
கொரோனாவிடம் கற்றபாடம்:
எல்லாம் தெரியும் என்று மமதையோடிருப்பவர்களை எதுவும் தெரியாதவர்களாக்குவது காலத்திற்குப் பிடித்த பொழுதுபோக்கு விளையாட்டு.
அதுவே நடந்துகொண்டிருக்கிறது உலகம் முழுக்க. சும்மா இருப்பது கஷ்டம் என்று சும்மா இருக்கும்போதுதான் புரிகிறது. தூங்கிக் கொண்டே இருப்பது தேங்கிக் கொண்டே போவதைப் போல் என்பதும் தெளிவாகப் புரிகிறது.
ஓய்வு என்பது அடுத்த வேலைக்கு அதிகமாய் திட்டமிடுவது என்பதைக் கொரோனா அழுத்தமாய் புரியவைத்திருக்கிறது.
பக்குவம் மனிதர்களைப் புனிதர்களாய் மாற்றும். சகமனிதர்களின் பேரன்பு எனும் பக்குவத்தைக் கொரோனா அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது.
வேகமாகத் தலைதெறிக்க ஓடியபோது கிடைக்காத நிம்மதியை குடும்பத்தாரோடு இல்லத்தில் இருக்கவைத்து கொரோனா தந்திருக்கிறது.
வெறுமையே அருமையை உள்ளபடி உணர்த்துகிறது.
கொரோனாவின் இழப்புகள் நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தந்திருக்கின்றன. உப்பு பொம்மையைக் கடலுக்குள் எப்படி மறைத்துவைப்பது?
உலக உருண்டையில் ஒருநாடு தவறுசெய்தாலும் அதன் வினையை உலகின் எல்லா நாடுகளும் அனுபவித்தாக வேண்டும்.
இந்த நோய்க்கிருமிகள் வந்தது சீனாவின் வவ்வால்களிலிருந்து என்று பழியைத் தூக்கிப் பறவைகள் மீது போட்டாலும் நகரும் நோய்க்கிருமி பரப்புநர்களாக உலகம் முழுக்கப் பரப்பியது யார்?
மனிதஇனம்தானே!
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பல இலட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
உயரிய தமிழர் பண்பாடு:
மேற்கத்திய கலாச்சாரத்தின் கைகொடுத்தல், இன்று தமிழ்ப் பண்பாட்டின் கைகூப்பலாக மாறியிருக்கிறது. வெளியில் சென்றுவந்தால் கைகால்களைக் கழுவிக்கொண்டு உள்ளே வா என்று மீண்டும் உலகம் முழுவதையும் சொல்ல வைத்திருக்கிறது.
அலோபதி மருத்துவ முறை கைவிரித்துவிட்ட நிலையில், நம் சித்தமருத்துவம் கைகொடுக்குமா என்று திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
பெரியம்மை நோயையும், போலியோ நோயையும் ஒழித்துவிட்டோம் என்று மார்தட்டிய வேளையில் எயிட்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், எபோலா வரிசையில் இப்போது கொரோனா உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்னைத் தவிர்க்க முடியுமே தவிர தடுக்கமுடியாது என்று நம் சட்டையைப் பிடித்து கொரோனா உலுக்கிக் கொண்டிருக்கிறது.
மனிதர்களின் உடல், மருந்து மாத்திரைகளின் வேதியியல் கிடங்காக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், புதுப்புது வைரஸ்களும் புதிதுபுதிதாய் உதித்து உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. நாடு எனும் எல்லைகளைக் கடக்கும் வல்லமை வைரஸ்களுக்கு உண்டு என்பதும், ஈவு இரக்கமில்லாமல் கொல்லும் அதன் கொடூர கரங்களுக்கு முன் ஏழை பணக்காரர் எல்லோரும் சமம் என்பதும் உண்மை.
கண்டம்விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகளையும் அணுஆயுதங்களையும் உருவாக்க முடிந்த அறிவியலால் கொத்துகொத்தாகச் சாவைத் தழுவும் மனிதர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்பது நம் அறிவின் எல்லைச் சுருக்கத்தைக் காட்டுகிறது.
தனித்திரு, விழித்திரு, தற்காத்து உன் உயிரைக் காத்திடு:
நாடுகளின் எல்லைகள் அடைக்கப்பட்டாலும் மனித உடல்களையே வாகனமாய் மாற்றிக் கொரோனா வைரஸ்களால் நாடுகடந்து நாசமாக்க முடிகிறது. நம்மை நாமே தனிமைப்படுத்தித் தற்காத்துக் கொள்வதைத் தவிர இப்போதைக்கு வேறுவழி ஏதுமில்லை என்ற உண்மையையும் நமக்கு உணர்த்தியிருக்கிறது.
மௌலானா ஜலாலுதீன் ரூமி சொல்வதைப் போல் “மனிதன் தன் கால்களால் தன் மரணத்தை நோக்கி நடக்கிறானோ” என்று எண்ணத் தோன்றுகிறது. கும்பல் கும்பல்களாக ஆடிப்பாடி மதுவருந்தி பல உறவுகளில் திளைத்த மேற்கத்திய கலாச்சாரத்தைத் தூரவீசி, “தனித்திரு, விழித்திரு, தற்காத்து உன் உயிரைக் காத்திடு” என்று தனிமை ஒன்றே வாழ்தலின் வழி என்று மாற்றிச் சொல்லவைத்திருக்கிறது இந்தக் கொரோனாவின் கொடூரத் தாக்குதல்.
தன்னலமற்ற சேவையாளர்கள்:
“உங்களுக்கு இருமல் இருக்கிறதா? கொரோனாவின் அறிகுறி” என்று பீதியைக் கிளப்ப வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டும், வடிவேலு படம் போட்டு யாரையாவது கலாய்த்து மீம்ஸ் போட்டுவிட்டும் ஜாலியாகத் தூங்கப்போகும் முன், இந்த ஒருமாதமாக உலகெங்கும் தூக்கம் தொலைத்துவிட்டு இரவுபகலாய் நண்பர்களை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.
ஊடக விழிப்புணர்வால் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழையும் போதே பலமுறை கைகளைச் சுத்தம் செய்துவிட்டு நம்மைக் காத்துக்கொள்ள முயலும் நாம், மருந்தே கண்டுபிடிக்கப்படாத மிகக் கொடுரமான நோய் தாக்கிய நோயாளிக்குத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை தரும் மருத்துவர்கள், அந்நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளும் செவிலியர்கள், கொரோனா பாதித்த நோயாளிகளின் ரத்த மாதிரிகளை ஆய்வுசெய்து முடிவுகளைச் சொல்லும் ஆய்வகஉதவியாளர்கள், அந்நோய் அந்த நோயாளியிடமிருந்து பிறருக்குப் பரவாமல் அந்த மருத்துவமனையை நொடிக்கொருமுறை சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளர்கள், ஆபத்தான கொரோனா பாதித்த இடங்களிலும் நகரின் பலபகுதிகளிலும் கட்டுப்பாடில்லாத மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி நமக்குப் பாதுகாப்பு தரும் காவல்துறை நண்பர்கள், மருந்து தெளிப்பதற்குத் தீயணைக்கும் வாகனத்தோடு முன்னே நிற்கும் தீயணைப்புத்துறையினர், வீடுவீடாக அலைந்து திரிந்து சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்கள், இரவுபகலாய் மக்கள் பணியாற்றிடும் மாவட்ட உள்ளாட்சி நிர்வாகப் பணியாளர்கள், கொரோனா பாதித்த களத்திற்கே சென்று துணிச்சலுடன் செய்திசேகரிக்கும் ஊடகவியலாளர்கள் ஆகிய அனைவரின் உடல்நலமும், அவர்களின் குடும்பத்தாரின் உடல்நலமும், எந்தக் குறைவுமின்றி நன்றாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்வாம். அவர்களின் மாசுமருவற்ற சேவையைப் பாராட்டி அவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் நோய்நொடியில்லாமல் நலமுடன் இருக்க எல்லாம்வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.
அன்னை தெரசா அவர்களின் மொழியில் சொல்லவேண்டுமானால் “பிரார்த்தனை செய்யும் கரங்களைவிடச் சேவை செய்யும் கரங்கள் உன்னதமானது!”
தமிழர் மருத்துவம்:
உணவே மருந்து மருந்தே உணவு என்று நம் முன்னோர் வகுத்தத்தந்த தமிழர் உணவு முறைகளை மறந்தோமே அதன் விளைவை இன்று வெவ்வேறு நோய்களின் வடிவில் எதிர்கொள்கிறோமே!
துண்டு சித்தரத்தைக் கொண்டு செல்வோன் வழியில் எந்தநோயும் நில்லாது என்றார்கள் நம் பெரியவர்கள்! செய்தோமா? பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்றார்களே!
மிளகைப் புறந்தள்ளிவிட்டுப் பீசாவின் பின்னால் அல்லவா போனோம்! பருத்திப் பால் பாயாசம் உண்டவர்கள் பர்க்கரின் பந்தியில் போயமர்ந்தோமே! மருந்து கால் மதி முக்கால் என்றார்களே நம் முன்னோர்!
நமக்கு மருந்தே விருந்தாய் மாறியதே! மூலிகை அரைத்தால் மூன்றுலகையும் ஆளலாம் என்றார்களே! காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என்று சொன்ன சித்தமருத்துவத்தை இதற்கு முன் சிந்தித்தோமா?
மாறக்கூடிய எல்லாவற்றையும் மாறாதது என்று நினைத்துப் பின் செல்வது கொடுமையானது,அதன் விளைவை நாம் இப்போது அனுபவிக்கின்றோம்.
பலா உத்தமம், மா மத்தியமம், பாதிரி அதமம் என்றார்களே! ஒரு வேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி, மூவேளை உண்பான் ரோகி, நான்கு வேளை உண்பான் போகி என்று என்றார்களே நம் முன்னோர், ஏன் நல்லதை நாம் மறந்தோம்?
வெந்தயம் போடாத கறியும் கறியல்ல சந்தையில்லாத ஊரும் ஊரல்ல என்றார்கள், வெந்தயத்தை ஏன் விட்டோம்?
சுட்ட எண்ணையைத் தொடாதே, வறுத்த பருப்பை விடாதே என்றார்களே. மங்கும் காலம் மாங்காய், பொங்கும் காலம் புளியங்காய் என்றார்கள். இப்போதாவது நம் தமிழர் வகுத்துத் தந்த பாரம்பரிய உணவு முறைக்கு மாறியாக வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளோம்.
இந்தியா மருந்து கண்டறியவேண்டும்:
வருத்தங்களுக்கு மத்தியில்தான் வாய்ப்புகளும் புதைந்திருக்கின்றன. அரியவகை இந்திய மரப்பட்டைகளிலிருந்து இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எனும் மாத்திரைகளைக் கேட்டு அமெரிக்க நாடே நிற்கும்நிலையில் இந்தியாவின் மருத்துவத்துறை உலகளாவிய அளவில் உயர்ந்து நிற்கிறது.
ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை உள்ளடக்கிய ஆயுஷ் மருத்துவத் துறையை நிர்வகிப்பதற்காக மத்திய அரசு ஆயுஷ் அமைச்சகத்தை உருவாக்கி வழிநடத்துகிறது.
இந்த அமைச்சகத்தின் வழிகாட்டலில் நம் பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளைக் கொண்டு கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை இந்தியா கண்டறியவேண்டும்.
நம்பிக்கையோடு இருப்போம்:
பாதிப்பு நமக்குப் பலமான பாடத்தைக் கற்றுத்தரத்தான் செய்கிறது, ஆனாலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது.
அடிபட்ட உடன் எழாதவரை காலம் கால்கீழ் போட்டு மிதிக்கும். எது நடந்தாலும் அஞ்சி நடுங்காமல் சிதறியோடாமல் அதை நேருக்கு நேர் சந்திப்பதில்தான் வாழ்வின் நுட்பம் உள்ளது.
தூக்கிஎறியப்படும் போதுதான் நம்முள்ளே இருக்கும் துணிச்சலின் துணி விலக்கப்படுகிறது. வருத்தங்களுக்கு மத்தியில்தான் வாய்ப்புகளும் புதைந்திருக்கின்றன. தாங்கிப் பிடிக்க கரங்களிருந்தால் தாங்கமுடியாத துன்பத்தையும் தாங்கலாம்.
உலகம் உருவாக்கிய பிரச்சினையை இறைவன் சரிசெய்வான் என எண்ணுவது என்ன நியாயம்? நாம் உருவாக்கிய சிக்கலை நாம்தான் தீர்த்தாகவேண்டும். மனதிடம் சொல் மனோதிடமே வெல்லும் என்று! தளராத மனமிருந்தால் வளராத மனிதரில்லை. தளராத நெஞ்சம் வேண்டும் இப்போது நமக்கு!
அச்சமற்றிருத்தல் மிச்சமற்று வாழ்தலின் அடையாளம்.
இனி இழப்பதற்கு ஏதுவுமில்லை என்று எண்ணும்போது, “நானிருக்கிறேன் அஞ்சேல்” என்று சொல்லி ஏதோவொரு திசையிலிருந்து நம்பிக்கையோடு ஒரு கைநீளுமே அந்தக் கைதான் நம்பிக்கை.
நம்பிக்கை குறையும்போது நம் உடலும் மனமும் ஒருசேர பாதிப்படைகின்றன. கையில் செல்பேசி இருக்கிறது என்பதற்காக எந்த நேரமும் கொரோனா இறப்புகள் பற்றிய செய்திகளையே பார்த்துக் கொண்டிருந்தால் மனஅழுத்தம் ஏற்படும்.
எதிர்மறை செய்திகளைப் பார்த்துபார்த்து உடல்வியர்த்து அட்ரீனல் சுரப்பியிலிருந்து கார்டிசால் எனும் ஸ்டீராய்டு இயக்குநீர் அதிகரித்து நம் உடலின் நோய்எதிர்ப்பு சக்தியை வெகுவாகப் பாதிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது கொரோனா போன்ற பாதிப்புகளுக்கு உடல் தயாராகிறது. தொலைக்காட்சியின் அதிரும் பின்னணி இசையில் ஒளிபரப்பாகும் அண்மைச் செய்திகள் யாவும் நன்மைச் செய்திகளாக இல்லாததால் ஒருநாளைக்கு ஓரிரு முறை செய்திகள் பார்த்தால் போதுமானது.
இல்லத்தில் இருப்பது மட்டுமே இப்போதைய மருந்து
கத்தியின்றி ரத்தமின்றி கொரோனா யுத்தமொன்று உலகம் முழுக்க நடக்கிறது.
நாம் மற்றுவர்களுக்குச் செய்யும் யாவும் வட்டியும் முதலுமாய் நம்மையே வந்து தாக்கும்.
வைரஸ் பரவாமல் நாமும் மற்றவர்களும் இருப்பதா இறப்பதா என்பதை முடிவுசெய்யும் என்ற இக்கட்டான நிலையில் நாம் உள்ளோம்.
தனிமை கொடுமையானது என்று யார்சொன்னது? தனிமைதான் என்னை எனக்கு உணர்த்தியது. தனிமையில்தான் நான் தனித்துவமானது என்பதை நான் அறிந்துகொண்டேன்.
தனியாய் இருப்பதொன்றே இனி நாம் இருப்பதற்கான ஒரே வழிமுறையாக எல்லோராலும் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது.
உலகடங்கினால் நோயடங்கும் என்பது உண்மையாயிருக்கிறது. நிலையின் தீவிரத்தை உணர்ந்தவர்களாய் வீட்டிற்குள் இருந்துகொண்டு சமூகவிலகலைக் கடைப்பிடிப்போம்.

Comments
Post a Comment