சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித்தேர்த்திருவிழா : பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி
சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில்
ஆனித்தேர்த்திருவிழா
வடம்பிடிக்க வாரிங்களா!
பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி
என்ன தவம் செய்திருக்கிறோமோ தாமிரபரணிக்கரையில்
வாழ! பஞ்சசபைகளிலே தாமிரசபையில் திருநெல்வேலியுறை செல்வராக ஈசன் அருள்பாலிக்கும்
நெல்வேலிச் சீமையில் ஆனித்திருவிழா அழகுத் திருவிழா!
தலவரலாறு
மழை கொட்டுகிறது, வேதபட்டர் ஈசனுக்குத்
திருவமுது படைக்க காயப்போட்டிருந்த நெல் நனையக்கூடாதே என்கிற எண்ணத்தில் ஈசனை
வேண்ட நெல்வேலியிட்டு நெல்லைக் காத்ததால் நெல்வேலி என்ற பெயர் நெல்லைக்கு வந்தது. அதனால்
அவருக்கு நெல்வேலிநாதர் என்ற பெயர் உண்டு. வேணு என்றால் மூங்கில், வேணுவனநாதர்
என்றால் மூங்கில்வனத்தில் உறைபவர் என்கிற பொருள் உண்டு. வேய்முத்தநாதர் என்றும்
சாலிவாடீசர் என்றும் அவர் அழைக்கப்படுகிறார். வடிவுடை காந்திமதித்தாயாரோடு
நெல்லையம்பதியில் ஈசன் அருள்பாலிக்கிறார். மூன்றாம் திருமுறையாய் பக்தர்களால்
போற்றப்படும் திருஞானசம்பந்தர் தேவாரம் “மருந்தவை மந்திரம்” எனத்தொடங்கி
திருநெல்வேலியுறை செல்வராக ஈசனைப் போற்றிப் புகழ்கிறது. இங்குள்ள சிவலிங்கத்திருமேனியின்
தலைப்பகுதியில் வெட்டுக்காயம் உள்ளதால் சுவாமிக்குத் தைலக்காப்பு நடைபெறுகிறது.
கம்பீரமான தேர்
இரண்டாயிரம்
ஆண்டுகள் பழைமையான சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனித்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
28 நீளமும் 28 அகலமும் 450 டன் எடையும்
கொண்ட தமிழகத்தில் மூன்றாம் பெரியதேர் இத்திருத்தலத்தில்தான் உண்டு. சுவாமி
நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதியன்னை, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர்
ஆகிய சுவாமிகளுக்கென்று ஐந்துதேர்கள் தேர்த்திருவிழாவன்று இழுக்கப்படுகிறது. ஜூலை
6 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனித்திருவிழாவின் சிறப்புநிகழ்வாக ஒன்பதாம்
திருவிழா தேரோட்டம் ஜூலை 14 ஞாயிறு அன்று நடைபெறுகிறது.
அழகான சிற்பங்கள்
அதிகாலையிலேயே சுத்துப்பட்டு கிராமங்களிலிருந்து
மக்கள் நெல்லையப்பர் ரதவீதியில் குவிந்துவிடுவார்கள். வண்ணக்கோலங்கள் ரதவீதியைப்
பத்துநாளும் அலங்கரிக்கும், வண்ணக் கொடிகளாலும் அழகிய குஞ்சங்களாலும்
தோரணங்களாலும் தேர்கள் அலங்காரம் செய்யப்படுவதை கட்டுத்தேர் காணாத கண்களும்
கண்களா? என்று கிராமத்து மக்களின் சொலவடைகளில் அறியமுடியும். நெல்லையப்பர் தேர்
புராணக்கதைகளை வெளிப்படுத்தும் அழகான மரச்சிற்பங்களால் ஆனது, மரச்சிங்கமும் ஈசனின்
காளையும் பூதகணங்களும் கணபதியும் முருகனும் நெல்லையம்பதியின் தலபுராணக்கதைகளும்
மரச்சிற்பங்களாக்கப்பட்டுள்ளது.
கங்காளநாதர் உலா
வெளியூர்க்காரர்கள் எட்டாம் திருவிழா அன்றே
தங்கசப்பரத்தில் சடாமுடியோடும் தங்கத்திருவோடு கமண்டலத்தோடும் ரதவீதியில் வரும்
கங்காளநாதரைப் பார்க்க காத்துக்கிடப்பார்கள். மறுநாள் நடக்கவிருக்கும்
தேர்த்திருவிழா ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக நடக்கிறதா! என்று பார்வையிட
வந்திருப்பதாகப் பேசிக்கொள்வார்கள். பத்துநாட்களும் நெல்லைரதவீதியில் திருவிழாக்
கோலம்தான்! அம்மையோடு அப்பன் கோபுரவாசல் வழியே வரும்போது காட்டப்படும் குடவாசல்
தீபாராதனைக்கு மின்னும் பச்சை இலை அல்வாவோடு ஊர்சனம் காத்துக்கிடக்கும்.
மகிழ்ச்சிப் பேரலை
அப்பனும் அன்னையும் தேர்உலா வருவதைக்
காணக்கண்கோடி வேண்டுமே! ஆனித்திருவிழா பக்தர்களுக்கு மகிழச்சிப் பெருவிழா.
அருள்தரும் புட்டாரத்தம்மையை வணங்கி மகிழ்ந்து துணிக்கடைகளாலும்
பாத்திரக்கடைகளாலும் நிரம்பிவழியும் சுவாமி நெல்லையப்பர் ரதவீதிக்குள் அவர்கள்
நுழையும் நேரம் மேளதாளத்தோடும் வேதகோஷத்தொடும் திருமுறைப்பண்களோடும் வடிவுடை
காந்திமதியம்மையோடு ஈசன் சாலிவாடீஸ்வரர் தேருக்கு வந்திருப்பார். கிழக்கே கதிரவன்
தன் ஒளிக்கற்றைகளால் அம்மையப்பருக்கு இளம்காலை நேரத்தில் வணக்கம் செலுத்தியிருப்பான்.
நெல்லையப்பர் தேர் ஐநூறு ஆண்டுகளாக தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
நான்கு வெளிச்சக்கரங்களோடும் நான்கு உட்சக்கரங்களோடும் ஐந்து தட்டுகளோடு
கம்பீரமாகத் தேர் ஓடிக்கொண்டிருக்கிறது. தேர் கிளம்பும் முன் தேரடி
சுடலைமாடனுக்குப் பொங்கல் வைத்து உத்தரவு கேட்கும் வழக்கம் உண்டு. பிரம்மதேவன்
சாரதியாய் அமர்ந்து தேரை ஓட்ட தேர்முன் துள்ளி எழும் குதிரைகளைக் காணக்காண ஆனந்தம்
பொங்குகிறது. குற்றால சீசன் தொடங்கும் நேரம் தூரத்தில் தென்றல் தவழ்ந்து வந்து
சில்லென்று முகத்தில் அறையும், வானிலிருந்து முப்பத்து முக்கோடி தேவர்களும்
பன்னீரைத் தெளிப்பதைப்போல வானும் சாரலெனும் தண்ணீரைத் தெளிக்கும்.
ஒற்றுமைத்திருவிழா
வியர்வை சொட்டச்சொட்ட எந்த வேறுபாடுகளும்
இல்லாமல் பக்தர்கள் ஒற்றுமையாய் மனம் ஒன்றி நெல்லையப்பரை வேண்டிக்கொண்டு வடம்
இழுக்கஇழுக்க தேர் மெல்லமெல்ல நகரத்தொடங்குகிறது. கருணைவடிவாகிய அம்மையப்பர் வடம்பிடித்து இழுக்க
வந்த பக்தர்களை அருட்பார்வையால் பார்க்கிறார். கருடன் வருகிறார், மூன்று முறை
வலம்வர ஈசனின் உத்தரவோடு வடம்பிடிக்கத் தொடங்குகிறார்கள் “சிவசிவா ஓடிவா” என்கிற
சப்தம் விண்ணை எட்டுகிறது. லட்சக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்தில் குதிரைகள்
அந்தரத்தில் பறந்தபடி தேரை இழுத்துவருவதைப் போன்ற காட்சியைப் பார்க்கும்போது,
நாமிருப்பது பூலோகத்திலா சொர்க்கலோகத்திலா என்று எண்ணத்தோன்றும்.
பக்திச்சொற்பொழிவுகள்
நெல்லையப்பர் ஆலயம் அளவில் பெரியதாக
விரிவுபடுத்திக்கட்டிய பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் எனும் நின்றசீர்நெடுமாறன்
அவர் பெயரில் பிராகாரத்தில் உள்ள நின்றசீர்நெடுமாறன் கலையரங்கில் வாரியார் சுவாமிகள் போன்ற அருளாளர்களின்
பக்திச்சொற்பொழிவுகளும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கும். தேரோட்டத்தன்று
பட்டுத்துணிகளோடு காந்திமதியானை அசைந்துஅசைந்து முன்னே சென்று வரவேற்பு
கொடுக்கும். ரதவீதி எங்கும் பலூன்கடைகள் ஊதல் கடைகளில் சனம் கூட்டம் கூட்டமாய்
அலைமோதும்.
பண்பாட்டுத் திருவிழா
இன்று நிலைக்கு வருவதுபோல் இருபதாண்டுகளுக்கு
முன் நெல்லையப்பர் தேர் ஒரேநாளில் நிலைக்கு வந்ததில்லை. ஆறேழுநாட்கள் கூட ஆகும். அதுவரை
கடைகளுக்கு விடுமுறை. எங்குபார்த்தாலும் நீர்மோர் தருகிறவர்களாலும் காகித விசிறிகள்
தருகிறவர்களாலும் ரதவீதி நிரம்பிவழியும். லாலாசத்திர முக்கோ, சந்திப்பிள்ளையார்
கோவில் முக்கோ எந்த முக்கில் நிற்கிறதோ அந்த பகுதி சேர்ந்தவர்கள் தேருக்குப்
பொங்கல் வைப்பார்கள், அதன்பின்தான் தேர் நகரத்தொடங்கும். முரசு சப்தம்
தேரிலிருந்து விண்ணை எட்டும். “மெய்யன்பர்களே திருத்தேர் வடம்பிடித்தால் ஈசனின்
முக்தி கிடைக்கும் அன்னையின் சக்தி கிடைக்கும்”
என்ற அறிவிப்புகள் இன்னும் உற்சாகமாய் வடமிழுக்கத்தூண்டும். தேருக்குத்
தடிபோடும் அடியவர்களின் வலிமையை வார்த்தைகளால் சொல்லமுடியாது. பிள்ளையார் தேர், முருகர்
தேர், சுவாமிதேர், சண்டிகேஸ்வரர் தேர் என்று எல்லா தேர்களும் அழகாக ரதவீதியில்
அணிவகுத்து வரும் காட்சியைக் காண்பதற்கு எத்தனை பிறவிகள் வேண்டுமானாலும்
எடுக்கலாம். நாயன இசையோடு பஞ்சவாத்தியம் என்றழைக்கப்படும் துந்துபி,
திமிலை,மத்தளம், இரண்டு தட்டுவடிவில் ஒன்றாக அடிக்கப்படும் இந்தளம், உடுக்கை,
கொம்பு ஆகியவற்றின் அதிர்வு பக்தர்களுக்குப் பரவசமூட்டும். முக்குத் திரும்ப
முனகுகிற தேர்மாதிரி தேர்குறித்த நினைவுகளிலிருந்து திரும்ப மீள்தல்
கடினம்.வாருங்கள் வடம் பிடிப்போம்.ஈசனின் அருட்பரப்பில் இடம்பிடிப்போம்.

Comments
Post a Comment