தினமலர் என் பார்வை: குடும்பம் எனும் ஆனந்த நிலையம்
மே, 15 உலக குடும்பதின சிறப்புக்கட்டுரை
குடும்பம் எனும் ஆனந்த நிலையம்
முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா
கல்லூரி, திருநெல்வேலி, 9952140275
எல்லோரையும் இணைத்து வைத்திருக்கும் ஒற்றுமைச்
சங்கிலி குடும்பம், உறவுகளின் வரவைக் கற்றுத்தருவது குடும்பம்தான். அனுபவ ஞானம்
தரும் போதிமரமும் குடும்பம்தான். கணவன்
மனைவி, குழந்தைகள், தந்தை தாய், சகோதர சகோதரிகள், மாமன் மாமி, சித்தப்பா சித்தி,
தாத்தா பாட்டி என்று உறவுகளின் உன்னத ஆலயம் குடும்பம். அமைதி நிலவும் ஆனந்த
நிலையமும் குடும்பம்தான். அன்பும் பாசமும் நேயமும் விட்டுக்கொடுத்தலும்
குடும்பத்தின் உயரிய மதிப்பீடுகள். பொறுமையையும் விட்டுக் கொடுத்தலையும் குடும்பம்
கற்றுத் தருகிறது. பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க உதவும் தெப்பம் குடும்பம்தான். உறவுகளால்
கோர்த்துக் கட்டப்பட்ட பாசக் கதம்பம் குடும்பம். நெஞ்சுக்குள் நுழைகிற பாசமொழியைக் குடும்பங்களே
கற்றுத்தருகின்றன. இடைவெளிகளை இட்டுநிரப்பும் இனிய பணியைக் குடும்பங்கள் இன்னமும் செய்கின்றன.
சகமனிதர்களை மதிக்கக் கற்றுத்தரும் பண்பாட்டுக்கூடம் குடும்பம்தான். அடுத்த
தலைமுறையை உருவாக்கும் கடமை குடும்பங்களுக்கே உண்டு. நிஜமான அன்பை, திடமான உறுதியை,
வளமான வாழ்க்கையைத் தருவது குடும்பங்கள்தான். வழிதவறிச் செல்கிறபோது வழிநடத்தும்
கலங்கரைவிளக்குகள் குடும்பங்கள்தான். குழந்தைகளின் வழிகாட்டிகள் பெற்றோர்கள்தான்!
பெற்றோர்களை நகலெடுத்தே குழந்தைகள் வளர்கின்றன. அமைதி தவழும் இல்லம் இறைவன் வாழும்
இல்லம். வீட்டுக்குள் நுழைந்த உடன் நிம்மதியும் அமைதியும் கிடைக்காவிட்டால் அது
இல்லம் இல்லை. குற்றங்களை உற்றுப் பார்க்கும் உருப்பெருக்கியன்று குடும்பம்.
மகிழ்வலைகள் குடும்பத்தை மேம்படுத்துகின்றன.
கணவன் மனைவி உறவு
ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் கணவன் மனைவி
உறவே குடும்பத்தின் ஆணிவேராகத் திகழ்கிறது. மனைவிக்குக் கணவன் மீது மரியாதை,
கணவனுக்கு மனைவி மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே இல்லம் இனிய சொர்க்கமாக
அமையும். ஆனால் இன்று திருமணம் பேசும்போதே மணமகனின் தாய் தந்தையர் தங்களோடு
இருக்கக்கூடாது என்று கேட்கும் பெண்பிள்ளைகள், வருகிற பெண்ணைக் கொடுமைப்படுத்தி
அல்ப சந்தோஷம் அடையும் மாமியார்களால் குடும்ப அமைப்பு ஆடிக்கொண்டிருக்கிறது. உறவுவலையை
அறுத்தெறியும் கூர்கத்தி நம் கோபம்தான். சினத்தைச் சிந்தியதால் சீரழிந்த
குடும்பங்கள் எத்தனை எத்தனை! பொறுக்கவும் பிடிக்காமல் இருக்கவும் பிடிக்காமல்
வெறுப்பைச் சிந்தி வெட்ட வெளியான குடும்பங்கள் ஆயிரம்ஆயிரம். திருமணமான ஒரே
ஆண்டுக்குள் தானே பெரியவர் என்கிற தன்முனைப்பால் விவாகரத்தை நோக்கி நீதிமன்றம்
நகரும் தம்பதியர் கூட்டம் கூடிக்கொண்டே இருக்கிறது. மகிழ்ச்சி இல்லா குடும்பங்கள்
மரணவீடுகளுக்கு ஒப்பானது. ஆயிரம் காலத்துப் பயிர் கண் எதிரே
கருகிக்கொண்டிருக்கிறது. குடும்பம் என்பது செங்கலால் கட்டப்பட்ட கட்டத்தில்
நடக்கும் இல்லறம் மட்டுமல்ல, அது அன்பான உள்ளங்கள் உள்ளன்போடு வாழும் அன்பு ஆலயம்.
நவீன தொழில்நுட்ப சாதனங்களுக்குத் தரும் இடத்தைக் கணவன் மனைவிக்கும் மனைவி
கணவனுக்கும் தராததன் விளைவு இல்லறம் நல்லறமாக நடைபெறவில்லை.
அழகிய முன்மாதிரிகள்
இறைவன் கொடுத்த இனிய வரங்கள் குழந்தைகள்.
அவர்கள் பெற்றோர்களை முன்மாதிரிகாளாகக் கொண்டே வளர்கிறார்கள். காலம் கடந்தும்
வாழ்வுக்கு உதவும் உயரிய மதிப்பீடுகளைக் கற்றுத்தரும் மதிப்பு மிகு மனிதர்கள்
பெற்றோர்கள். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக மாறும் பேறு பெற்றோர்கள். இன்றைய பிள்ளைகள் நம் சொல்லைக் கேட்பதில்லை மகன்
இரண்டு லட்சரூபாய் ஸ்போர்ட்ஸ் பைக் கேட்கிறான், மகள் எந்த நேரம் பார்த்தாலும் இணையத்திலே
இருக்கிறாள், என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசுகிறாள் என்ற குற்றச்சாட்டைப்
பெற்றோர்கள் குழந்தைகள் மீது வைக்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் அக் குழந்தைகள்
முன்பு போடும் சண்டைகள் அக் குழந்தைகளைப் பெரிதும் பாதிக்கிறது. தாயின் அன்பு அக்
குழந்தைகளுக்கு வாழும்போதே சொர்க்கத்தைக் காட்டுகிறது. தந்தையின் கண்டிப்பு
வாழும்போது நெறிமுறையைக் கற்றுத் தருகிறது. தாய் என்றும் தந்தை என்றும் பதவியைத்
தந்த குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் தரும் பரிசு, கண்டிப்பான வழிகாட்டல்தான்.
தன்னலம் கருதாமல் உழைக்கும் தாய், தன்னையே பணையம் வைத்துப் பொருளீட்டும் தந்தை,
இவர்களுக்காகத்தான் இன்னும் மழை பெய்கிறது.
இனிய பெற்றோர்கள்
உறவுகளின் உன்னதத்தைக் குழந்தைகளுக்கு
உணர்த்துங்கள். அளவுகடந்த பாசத்தின் காரணமாகக் குழந்தைகளைக் கண்டிக்காமல் விட்டால்
அக்குழந்தைகள் வழிதவறிச்செல்லும். வீட்டின் வலியையும் வாய்ப்புகளையும்
குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். உங்கள் கனவுமூட்டைகளைச் சுமக்கும் சுமைதாங்கியல்ல
உங்கள் குழந்தைகள். குழந்தைகளோடு மனம்விட்டுப் பேசுங்கள். அன்பைக் கொட்டி
வளர்க்கும் இல்லம் பாசத்தை வளர்க்கும் உள்ளம். சரியாக வளர்க்கப்படாத குழந்தைகள்
சமூகத்தின் நச்சுமரங்களாக மாறுகின்றன. மாராட்டிய மாமன்னர் வீரசிவாஜியை வளர்த்த
ஜீஜாபாய் பண்பாட்டையும் ஊட்டி வளர்த்தார். மோகன்தாஸ் கரம்சந்த்காந்தியைக் கொள்கைப்
பிடிப்புள்ள மகாத்மாவாக மாற்றியதில், அவர் தாய் புத்லிபாய் அம்மையாருக்குப்
பெரும்பங்குண்டு. ஆனால் பெற்றோரைத் தூக்கி எறிந்து அப்பால் செல்கிற குழந்தைகள் இன்று
பெருகிவிட்டனர். புரியாத உறவுகள், தெரியாத உலகம் யாவும் சிக்கல்தான். செல்பேசியின்
தொடுதிரைகளுக்குள்ளாகத் தொலைந்து கிடக்கிற இளைய சமுதாயத்திற்கு யதார்த்தத்தைக்
கற்றுத் தரவேண்டியவர்கள் பெற்றோர்கள்.
பண்பாட்டுக்கூடம்
வாழ்வின் சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்ளும்
வழியையும், வலிமையையும் குடும்பங்களே தரமுடியும். இல்லறமெனும் நல்லறம் சிறக்கக்
குடும்பங்களே துணைசெய்கின்றன. பணத்தைவிட அழகைவிடக் குணமே உயர்ந்ததென்று
கற்றுத்தரும் பண்பாட்டுப் பள்ளிக்கூடங்களே குடும்பங்கள்தான். இருப்பதைக்கொண்டு
சிறப்பாய் வாழும் முறைமைதனைக் கற்றுத்தருவதே குடும்பம்தான். வசதியான வாழ்க்கை, கார்,
பங்களா, கோடிகள் இவைமட்டுமா வாழ்க்கை?
குடும்பத்தைக் கொண்டாடுவோம்
குடும்பம் என்றும் சுமையாயிருந்ததில்லை.
ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாததால் சண்டைகளும் பூசல்களும் நிறைந்த இடங்களாகக்
குடும்பங்கள் மாறின. தன் கருத்தே சிறப்பானது, நானே பெரியவன் என்கிற உயர் எண்ணம்
சீட்டுக்கட்டுகள் சிதறி விழுகிற மாதிரி குடும்பங்களைக் குலைத்துவிடும்.
எல்லோர்க்கும் உள்ளமுண்டு, அவரவர்க்கு அவரவர்
நம்பிக்கைகள் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். யாருடைய மனமும் புண்பாடாமல்
பேசப்பழகுங்கள். “நாங்கள்லாம் முப்பது ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் இருந்தோமா”
என்று பேசத் தொடங்குவதற்கு முன், முப்பது
ஆண்டுகளுக்கு முன் உள்ள அதே முகத்தோடா நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று
ஒருமுறை கண்ணாடியைப் பார்த்துக் கொண்டுபேசுங்கள்.
பேசுங்கள்
தொலைக்காட்சிப் பெட்டி முன்பும் செல்போன்களிலும்
அகத்தையும் முகத்தையும் தொலைத்துக்கொண்டிருக்கும் உங்கள் பிள்ளைகளை அழைத்து
மனம்விட்டுப் பேசுங்கள். என்னதான் தலைபோகிற அலுவலக வேலைகள் இருந்தாலும்
மனைவியோடும் குழந்தைகளோடும் அவ்வப்போது வெளியூர்ப் பயணங்கள் மேற்கொண்டு, வாழ்க்கை
வாழ்வதற்கே என உணர்த்துங்கள். எப்போதும் எரிந்துவிழுந்து கண்டிப்பாக இருப்பதைவிடக்
கடினமான சூழ்நிலைகளை மென்மையான நகைச்சுவையால் இட்டு நிரபபுங்கள்.
உணர்த்துங்கள்
குடும்பத்தின் கஷ்ட நஷ்டங்களைக் குழந்தைகளுக்கு
உணர்த்தி வளருங்கள், கிணற்றுக்குள் போட்ட கற்களாய் மனதிற்குள் போட்ட சொற்கள்,
குளிர்பதனப் பெட்டிக்குள் யாரும் கவனிக்காமல் பாடமாகிச் செத்துப்போன பல்லிமாதிரி
குருவிக்கூடாக இருந்த குடும்பங்கள் இன்று உடைந்த கண்ணாடிச் சில்லுகளாய் சிதைய யார் காராணம்? சிலரின் அதி காரம் அதிக காரமாய்
மாறிக் குடும்ப உறவுகளைச் சீரழித்துக்கொண்டிருக்கின்றன. உன்னதமான கணவன் மனைவி
உறவில் சந்தேகவிரிசல் விழுந்து கண்ணெதிரே உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது.
யார் பெரியவர் நீயா? நானா? என்கிற தன்முனைப்பு தம்பதிகளை ஆட்டிப்படைத்துக்
கொண்டிருக்கிறது. விட்டுக் கொடுத்தலும் பொறுமையும் அப்பால் போய் சவால்விடுவதும்
சண்டை போடுவதும் முன்னே வந்து நின்றுகொண்டிருக்கிறது. பொறுமையையும் நிதானத்தையும்
கற்றுத்தாருங்கள்.
புரிந்துகொள்ளுங்கள்
“ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை
உண்டு” என்பது அறிவியலுக்கான கோட்பாடு மட்டுமில்லை, குடும்ப வாழ்வியலும் அதைத்தான்
பேசுகிறது. சிறகுகளைக் கத்தரித்துவிட்டுப் பறக்கச்சொல்கிறது இந்தக் குடும்பஅமைப்பு
என்கிறவர்களுக்குப் பதில், இந்தியாவின் பண்பாட்டை இந்தக் குடும்ப அமைப்பே
காக்கிறது என்பதுதான். வீடு என்பது
தங்குமிடம் என்றஅளவில்மட்டும் நாம் புரிந்துகொண்டிருக்கிறோம், ஆனால் அமைதி
தங்குமிடம், மகிழ்ச்சி பொங்குமிடம் என்று நாம் அறியாமலிருக்கிறோம்! ஒருசெடியைப்
பதியன்போட்டு இன்னோர் இடத்தில் நடும்போது தாய்மண்ணைக் கொஞ்சம் எடுத்துச்சென்று
அச்செடியோடு வைப்போமே அதேபோல்தான் நம் குடும்பம் நாற்றங்காலாய் அமைந்து இன்னொரு
வீட்டிற்குத் திருமணம் முடித்துச்செல்வதற்கேதுவாய் நம் பண்பாட்டையும் நம்
பழக்கவழக்கத்தையும் கற்றுத்தருகிறது. அவ்வகையில் குடும்பம் உறவுகளின் அருமை
சொல்லித்தரும் பண்பாட்டுப் பயிற்சிக்கூடம்.
அன்பின் கதம்பம்
மனைவி என்பவள் சமைத்து, துணி துவைத்து வீட்டைப்
பார்த்துக் கொள்பவள் என்பதையும் தாண்டி அவளுக்கும் மனம் உண்டு ஆசாபாசங்கள் உண்டு
என்று கணவன் புரிந்து கொள்வதும், தன் விருப்பப்படியே நடக்கும் எந்திரமாகத் தன்
கணவன் இருக்கவேண்டும் என்று மனைவி நினைப்பதும் சிக்கலுக்கு அடித்தளமிடுகிறது.
திருமணம் என்கிற பந்தம் புனிதமானதுதான் என்றாலும் அந்தப் புனிதத்தன்மையையும்
தாண்டி இருவரின் புரிதல்களும் ஆசாபாசங்களும் அப்புனித உறவை நீடிக்க வைக்கின்றன.
போர்க்களமில்லை
குடும்பம்
ஆலமரத்தில் விழுதுகளும் அன்பெனும் வேரை நம்பியே உள்ளன. முரண்கள் ஒருபோதும்
அரண்களாக இருக்கமுடியாது! சண்டையிட்டு மண்டையுடைக்க குடும்பம் ஒன்றும் போர்க்களம்
இல்லை. காட்டுப்பறவைகள்கூட ஒற்றுமையாக இருக்கும்போது வீட்டுஉறவுகள் நாம் ஏன்
இணக்கமின்றி பிணக்கத்தோடு அலையவேண்டும்? பிரிவினைகளும் பிறவினைகளும் நம்
குடும்பங்களின் பிரிவுகளுக்கும் பிளவுகளுக்கும் காரணமாகலாமா? பண்பாட்டைப் புகட்ட
வேண்டிய இல்லமெனும் இனிய வகுப்பறை, பிரிவினைகளை உருவாக்கும் பகுப்பறைகளாக
மாறிவிடக்கூடாது. முட்கள் புகுந்து விட்டன என்பதற்காக கால்களை யாரும் கத்தி கொண்டு
அறுத்தெறிவதில்லை. எல்லாவற்றையும் அக்குவேர் அணிவேராக அலசியாராய்ந்து தீர்ப்புச்
சொல்வதற்கு அநேகர் உள்ள நாட்டில் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு யாரும்
முன்வருவதில்லை. அன்பு ஒருபோதும் அடிமைத்தனம் செய்யாது, அன்புக்கு ஈடு இந்த உலகில்
ஏதும் கிடையாது, காற்றுக்கு இன்னும் மாற்று வராததுமாதிரி அன்புக்கு மாற்று எங்கும்
எப்போதும் கிடையாது. உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து களைத்து விழும்போதுதான்
முளைத்தெழுகிறது நமக்கு எந்த ஞானமும். தடைமாற்றும் யுகங்கள் இதில் தடுமாறும்
மனங்கள் அன்பில்ல குடும்பங்கள்!
நினைத்துப் பார்க்கும் பழைய நிகழ்வுகள் மனதில் நெகிழ்வுகளாகின்றன. பேசிச்சிரித்த
பொழுதுகள்,ஒன்றாக இருந்த நிமிடங்கள் பேரோசையாய் அப்பால் போகின்றன.
வேண்டாமே கத்திச்சொற்கள்!
எல்லோரையும்
தராசுத் தட்டுகளில் ஏற்றி நாம் நிறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தோமே என்கிற யாரிடமும் ஏதும் சொல்ல முடியாத மௌனக்குரல்கள்
எப்போதும் எவரிடமும் உண்டு. இனிப்பில் நனைத்த சொற்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை,
குத்திக் கிழிக்கிற கத்திச்சொற்கள் குடும்பத்திற்குத் தேவையில்லை. குடும்பம்
நொந்தவனமல்ல, இனிமை சேர்க்கிற நந்தவனம். குறையாகக் கூறாமல் முறையாகக் கூறும் இதமான
வழிகாட்டல் குடும்பத்திலுண்டு. இருப்பின் அருமை எப்போதும் இழப்பில்தான் தெரியும். இல்லாமையைக்
குத்திக்காட்டி இயலாமையைச் சுட்டிக்காட்டும் விசாரணை மன்றமன்று குடும்பம்.
வேர்வைத்திருப்பது பார்வைக்குத் தெரிவதில்லை உண்மையில் அன்பே குடும்பத்தின்
மூலவேராய் மறைந்திருக்கிறது. ஆணி அடிக்கிற போது விரல்களை நைத்துக்கொள்வது மாதிரி
சில நேரங்களில் ஒன்றோடு இன்னொன்று ஒன்றி நடந்துவிடுகிறது. கலகமில்லா உலகமுண்டா?
கலக்கம் இல்லா மனங்கள் உண்டா? நீர் வற்றிப்போனால் வேர் வற்றிப்போகத்தானே செய்யும்.
பக்குவப்படப் பட்டுத் தெளியவேண்டும். பொறுப்பை விதைக்க வேண்டிய இடங்களில் நாம்
வெறுப்பை விதைக்கலாமா? சருகாகச் சம்மதிக்குமா எந்த பசும்இலையும்? நடந்தது
நடந்ததாகவே இருக்கட்டும் இனி நடக்கவேண்டியது நல்லதாகட்டும்.
நம்மால் முடியும்!
மகிழ்விருக்கும் குடும்பங்களில்தான்
நெகிழ்விருக்கும். பேசித்தீர்க்க முடியாத பிரச்சினைகள் உலகத்தில் ஏதுமில்லை. துக்கம்
துரத்தும்போது தலைசாய்க்க ஓர் ஆதரவான தோள்தேவை. கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து
தனிக் குடித்தனங்களாக மாறியபின் அன்பும் ஆதரவும் குறையத் தொடங்கிவிட்டன.
குடும்பத்தை உடைத்துதான் குதூகலம் கிடைக்கும் என்பதில்லை. காகம் கொத்துகிற மாட்டு
உண்ணிகள் மாதிரி, சோகம் குத்தும் உண்ணிகளாய் நாம் மாறலாமா? பூசலும் ஏசலும் குடும்பத்தைப்
பலவீனமாக்கும். நெடுஞ்சாலைகளைச் சோலைகளாக்க அரளிகளால் முடிகிறபோது நம்மால்
குடும்பங்களைச் சோலைகாளாக்க முடியாதா? கோபத்தோடு கோடரி வீசுகிறவன் மரங்களோடு
மலர்களையும் அல்லவா மரணிக்க வைக்கிறான்.
இனிய குடும்பங்கள்
வாட்ஸ்அப்களில் மட்டுமா! வாழ்க்கையிலும்
குழுக்கலாகவல்லவா நாம் இயங்குகிறோம்! சொல்லுக்குள் முள்ளை வைத்த குடும்பங்கள்
உள்ளுக்குள் வருத்தத்தோடல்லவா வாழும்! போட்டி போட்டு வாழ்வதற்குக் குடும்பம்
ஒன்றும் பந்தயக்கூடமல்ல. அன்பை விதைக்கும் ஆனந்தக்கூடம்! உறவுகளின் வரவுகளில்தான்
குடும்பத்தின் மகிழ்ச்சி குடியிருக்கிறது. வாடிப்போகாத முகங்கள், தேடிச்செல்லாத
பாதங்கள், சொத்துக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடும் சொந்தங்கள். உறவாயில்லை
பரவாயில்லை என்று சொல்லும் கூட்டம், இவையெல்லாம் இனியும் நடக்க வேண்டாம்.
கர்ப்பக்கூட்டுக்குள் இதமாயிருக்கும் மனிதப் பிஞ்சுகள் வளர்ந்தபின்பு அக்கூடுகளை
உடைத்து நொறுக்குவது என்ன நியாயம்? குடும்பத்தின் சந்தோஷம் என்பது சங்கடங்களையும்
சவால்களையும் இணைந்து எதிர்கொள்வதில்தான் இருக்கிறது என்று புரிந்தவர்கள்
வெற்றிகரமாகக் குடும்பம் நடத்துகிறார்கள். உருகத் தொடங்குகிற ஐஸ்கிரீமையும் வேகமாகப்
பருகத்தொடங்குகிற குட்டி குழந்தைகளைப் போல் மனமிருந்தால் எந்தத் துன்பமும் நம்மை
அணுகப்போவதில்லை. வனங்களைப் போல் நம் மனமும் மாறக்கூடாது, நம் தினங்களை ரணங்களால்
மூடக்கூடாது. கைதவறி விழுகிற கண்ணாடிக் குவளைகள் அல்ல நம் தமிழகக் குடும்பங்கள்,
பட்டை தீட்ட தீட்ட ஜொலிக்கிற உறுதியான வைரங்கள் நம் குடும்பம் என்று உலகுக்கு
உணர்த்துவோம். அப்படி இருந்தால், திருமலையில் திருவேங்கடமுடையான் அருள்பாலிக்கும்
ஆலயம் மட்டுமன்றி, உள்ளம் பூரிக்கும் நம்
இல்லமும் ஆனந்த நிலையம்தான்.

Comments
Post a Comment