தினமலர் என் பார்வைக் கட்டுரை: சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி


மகிழ்ச்சி எனும் மலர்ச்சிப் பூ

முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் கலைப்புல முதன்மையர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275

                 நாம் அணியும் எல்லாப் பொன்னகைகளையும் விடவும் அழகானது நம் முகம் சிந்தும் இனிமையான புன்னகை. மலர்ச்சியும் மகிழ்ச்சியும் நம் வாழ்நாளை வெகுவாக நீட்டிக்கிறது. 

ஒவ்வொரு விடியலிலும் மகிழ்வலைகள் நம்முள் எழ என்ன செய்யவேண்டும்? 

வெறுப்பை மறுத்துச் சிரிப்பை நம் உள்ளத்திற்குள் ஊற்ற என்ன செய்யவேண்டும்? 

ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழ்பவனுக்கு அவன் மனம் அருவிபோல் பொங்கத்தான் செய்யும். 

அந்தந்த கணத்தை அனுபவித்து வாழ்பவனுக்கு இந்த வினாடி மட்டுமன்று எல்லா வினாடிகளும் அருமையானதுதான். 

வளர்ந்த செடியால் தொட்டியையும் துளைத்துக் கொண்டு மண்ணில் வேர்பரப்பமுடிகிறது. 

சென்டிமீட்டர்களால் வளர்ந்ததாய் காட்டிக்கொண்டிருக்கும் நம்மால் அவ்வாறு ஏன் முடியவில்லை? 

வேதனைப் பரப்பில் நம் வேர்களைப் படரவிட்டு வருத்தத்தின் நிறுத்தத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம்.

 வெளியில் இல்லை
 நமக்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் நாமே பொறுப்பு என்று உணரத் தொடங்கினால் எங்கும் எப்போதும் மகிழ்ச்சிதான். 

தேனடையில் தேனி சேர்த்து வைத்திருக்கும் தேனைத் தன் கரங்களால் பிழிந்தெடுக்க முடிந்த மனிதனால் எவ்வாறு மலர்களுக்கு வலிக்காமல் தேனைச் சேகரிப்பது என்ற ரகசியத்தை மட்டும் ஏன் தெரிந்துகொள்ள முடியவில்லை.

 சந்தோசம் என்றும் வெளியில் இல்லை. 

அது உள்ளுக்குள் உள்ளது, உணர்வாய் தெரிவது.

 பிறந்தகுழந்தையின் பிஞ்சுப்பாதம், இளங்காலைப் பொழுதின் இனிய தென்றல், ஆலம்விழுதுகளில் ஆடிய ஆட்டம், கால்நுனி நனைக்கும் கடலலை நுரை. பேருந்துப் பயணத்தில் வழியும் இசை. தேடிவந்து காதுநிறைக்கும் நண்பர்களின் இனிய பேச்சு, பதறிச் செய்யாத நல்ல காரியம், நதிப்புனல் குளியல் என  எல்லாம் இன்பமயம், ஏன் துன்ப பயம்?

மனம் தரும் தனம்

நம்மை வேறுயாரும் ஊக்கப்படுத்தாவிட்டால் பரவாயில்லை, நம்மை நாமே நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்வோம். 

மகிழ்ச்சியின் திசைநோக்கி நம்மைத் திருப்பிக்கொள்வோம். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா? என்று கேட்டுக்கொள்வோம்,

அப்படிக்கேட்கமுடிந்ததால்தான் பாரதியால் தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா என்று பாடமுடிந்தது.

அறுப்போம் கவலை வலை

நடக்காத ஒன்றை நடந்துவிட்டால் என்ன செய்வது என்று கலங்கிக் கொண்டிருக்க கவலைகளின் கலவையா நாம்? 

கவலையைக் கடக்க ஒரேவழி, என்ன நடந்தாலும் மகிழ்ச்சியாய் இருப்பதுதான். 

ஊதிப் பெரிதாக்கப்படுகிற பலூன் விரிவானில் வியப்பை நிரப்பிப் பறக்கிற மாதிரி நம்மை நம் உணர்வை நிரப்பிப் பரப்போம். 

மகிழ்வை நிரப்பும் மனம் மகிழ்ச்சிப் பெருவெளியில் தன்னை நிறைத்துப் பறக்கிறது. அன்போடு வாழ்வதன் அடையாளம் மகிழ்ச்சியாயிருப்பது மட்டுமே. என்ன செய்கிறோம் என்கிற உணர்வோடு நாம் ஒவ்வொரு செயலையும் செய்தால் என்றும் எப்போதும் எங்கும் வருத்தமில்லை.


சிரிப்பு தரும் சிறப்பு


புன்னகை மலர்கள் பூக்கும் வேளையில் சோகங்கள் எல்லாம் சுகங்களாகும். 

விக்கலைத் தண்ணீர் ஊற்றி நிறுத்துகிறமாதிரி சிக்கலைச் சிரிப்பைச் சிந்துவதால் மட்டுமே நிறுத்த முடியும். 

தீமையறியா மனம் மகிழ்வைத் தரும் தினம். பூத்துக் குலுங்குகிற மலர்களைப்போல் பார்த்துக் குலுங்குகிறது வாழ்வெனும் வனம். 

தற்படம் எடுக்கிறவரின் முகமாய் வாழ்வு நம் மகிழ்வலைகளைப் பதிவு செய்துகொண்டே இருக்கிறது. 

நான் இப்போதும் எப்போதும் உற்சாகமாய் இருப்பேன் என்று நமக்குள் சொல்லிக் கொள்ளும்போதுதான்  மகிழ்ச்சியாய் வாழ்கிறோம். சின்ன சின்ன மகிழ்ச்சிகளால் நிறைகிறது இந்த வாழ்வு. 

கவனிக்காமல் சைடுஸ்டாண்ட் போட்டு இருசக்கர வாகனத்தில் பயணிக்கிற சகமனிதனைச் சப்தமிட்டு கவனமாக்குவது முதல் வடிவேல் காமெடி பார்த்து வயிறுகுலுங்கச் சிரிப்பது வரை சின்னசின்ன சந்தோஷங்களால் நிறைந்திருக்கிறது இந்த வாழ்வு.

மனமிருந்தால் மகிழ்ச்சியுண்டு

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதற்காக நம்மை எல்லாவற்றுக்கும் மாற்றிக்கொள்ளத் தொடங்கினால் என்றும் நிம்மதி கிடைக்கப்போவதில்லை. 

எல்லாவற்றையும் மனம்தான் தீர்மானிக்கிறது, 

அதனால்தான் “மனிதன் என்பவன் தெய்வமாகலாம், வாரிவாரி வழங்கும்போது வள்ளலாகலாம், மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம், வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம். துணிந்துவிட்டால் தலையில் எந்தச் சுமையும் தாங்கலாம்”  என்று கவியரசு கண்ணதாசன் சுமைதாங்கியில் எழுதினார்.


தாங்குகிற கரங்கள்


விழுதலைப் பற்றியே நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம், நாம் கவனிக்காத காரணத்தால் நம்மைவிட்டு வழுக்கிச் சென்ற வாய்ப்புகளை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. 

எதையும் இழந்தபின்தான், இருந்ததன் இருப்பை அது அந்தந்த கணங்களில் தந்த இன்பத்தை நாம் எண்ணிப்பார்க்கிறோம். 

அதன் ஏக்கத்தில் பாதிநாட்களையும் சோம்பித் தூங்குகிற தூக்கத்தில் மீதிநாட்களையும் கழிக்கிறோம். 

சோர்ந்து விழும்போது தாங்குகிற கரங்கள் இரண்டேனும் இருந்தால் நாம் வாழ்வில் எதையோ சாதித்திருக்கிறோம் என்று எண்ணத் தோன்றுகிறது.

நிறைவான வாழ்வு

நிறைவான வாழ்வில்தான் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் உள்ளது.

 மரமேறத் தெரியவில்லையே என்று மீன்கள் வருத்தப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது? 

தொட்டிக்குள் வாழ முடியவில்லை என்று புலிகள் புலம்பினால் நன்றாக இருக்குமா? 

வளர்ச்சியின் தொடக்கம் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் உள்ளது. நமக்குக் கிடைக்காத ஒன்று மற்றவர்களுக்கும் கிடைக்காமல் போகவேண்டும் என்கிற எண்ணம் நம்மையும் அழித்து மற்றவர்களையும் அழிக்கிறது. 

மற்றவர்களிடம் அன்புக்கு ஏங்குகிற நாம், அந்த அன்பை மற்றவர்கள் பெற அவர்களை வெகுவாக ஏங்க வைக்கிறோம்.

  வேரில்லாமலும் நீரில்லாமலும் நம்முள் வளர்கிறது பொறாமை எனும் பெருஞ்செடி! தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய், ஆனால் மன்னிப்பு கொடுப்பதற்கு யோசிக்காதே என்று அதனால்தான் அன்னை தெரசா அறிவுரை வழங்கினார். 

தினமும் அஞ்சியஞ்சிச் சாவதைவிட ஒருநாள் சவாலை எதிர்கொள்வது எவ்வளவோ மேலானது. துணிவே துணை என்று வாழ்பவர்களுக்கு எல்லா நாட்களும் மகிழ்ச்சி நாட்களே!


சந்தோஷம் வாழ்வில் பாதிபலம்

“சந்தோஷம் சந்தோஷம் வாழ்வில் பாதிபலம்” என்கிற திரைப்படப் பாடல்வரிகள் நம் காதுகளை நிறைக்கும்போது, சந்தோஷத்தின் மேன்மையை உணர்ந்து கொள்ள முடிகிறது. 

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று புறநானூற்றுப் புலவன் அதனால்தான் அன்றே சொன்னான்.

 `மகிழ்வான பொழுதுகளில் நாம் குதூகலமான குழந்தைகளாகவே மாறுகிறோம்.

 எந்த மகிழ்வலைகளும் அலையலையாய் வெளியே தவழ்ந்து வருவதில்லை. 

மகிழ்ந்த அந்த உணர்வுகள் உள்ளுக்குள் உறைந்து சொல்லுக்குள் நுழையும்போது கவிதையாக மாறுகிறது.

பாசம்

நெகிழ்வாயிருப்பவன் எப்போதும் மகிழ்வாயிருப்பான். 

இருக்கமாய் இருப்பவர்கனிடம் இன்பம் வரத் தாமதமாகும். 

ஆயிரம் வலிகள் மனதிலே இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இனிக்க இனிக்கப் பேசிச் சிரிக்கச் சிலரால் மட்டுமே முடிகிறது. 

பழைய ஆல்பத்தைப் புரட்டிப் பார்க்கும்போது நாம் அந்தக் கருப்பு வெள்ளை இளமைக் காலத்திற்குள் ஒரு வினாடி சென்று வந்துவிடுகிறோமே! 

அதை இறந்தகால இறகுகள்  என்று இறக்கிவைத்துவிட முடியுமா?  அது நமக்கு மகிழ்ச்சியைத் தரவில்லையா? 

நாம் பெற்ற குழந்தைகளிடம் பொழியாத பாசத்தையும் நேசத்தையும் பெறாத குழந்தைகளாயிருக்கும் பேரன் பேத்திகளிடம் தாத்தாக்களாக பாட்டிகளாக மாறிச் சிரிக்கிற மகிழ்ச்சி சாதாரணமானதா?

மகிழ்ச்சியும் மலர்ச்சியும்

எப்போதும் எங்கேயும் குறைகூறிக்கொண்டே இருக்காமல் எல்லோரையும் நேசிப்பவர்களையே எல்லோரும் நேசிக்கிறார்கள், 

அவர்கள் வாழ்வில் எல்லா நாட்களும் மகிழ்வான நாட்கள்தான். இல்லாத மாயைகளுக்காக இருக்கிற இனிமையான வாழ்வைப் பணயம் வைக்கிற மனிதர்களாக நாம் ஏன் இன்னும் இருக்கவேண்டும்?

 விட்டுவிடுதலையாகி விரிவானில் பறக்கிற சிட்டுக்குருவிகளைப் பார்க்கும்போது நம் மனம் பரபரப்பதை மகிழ்ச்சி என்று சொல்லாமல் வேறுஎன்ன சொல்ல? 

மகிழ்ச்சியும் மலர்ச்சியும் மனதின் புன்னகை மலர்கள். சருகுகளின் சப்தத்தில் கானகங்கள் வருந்துவதில்லையே! 

அதைப்போல இறந்தநாட்களுக்காகவும் இழந்தபொருட்களுக்காகவும் புன்னகை மனிதர்கள் எப்போதும் புலம்புவதேயில்லை. 

நினைவுகள் எப்போதும் புனைவுகளாயிருந்தாலும் இன்பமாய் இருந்த நிமிடங்களில்தான் இளைப்பாறிச் செல்கிறது இளகிய மனம்.

 உறுதி

வறுத்தெடுக்கிறது வாழ்வும் கடலை வாணலியாய் சிலநேரம். ஆனாலும் அதை எதிர்கொள்ளும் உறுதிமனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!

 வெறுப்பாயிருகிற எதுவும் சிறப்பாயிருக்காது. ஏன் வெறுக்க வேண்டும்? ஏன் சிலவற்றை எதிர்கொள்ள மறுக்கவேண்டும்? 

ஆடியடங்கும் வரை ஓடித்தானே ஆகவேண்டும்?

 அறுத்தெறிவதற்கு நாளொன்றும் வாளன்று. சிரித்துத் தொடங்க வாழ்வு தினமும் தரும் புதுவாய்ப்புதானே ஒவ்வொரு நாளும். கண்ணீர் சிந்தவா கண்கள்? 

கனவுகள் வழிவதற்கே கண்கள். ஊசிக்குப் பின்னால் ஊர்ந்து செல்கிற நூல்மாதிரி கவலைக்குப் பின்னால் ஊர்ந்து செல்கிறதே இந்த வாழ்வு. இருப்புக்கும் வெறுப்புக்கும் மத்தியில் ஊடாடுகிறதே இந்த ஊசல் வாழ்க்கை. கவலைத் திவலையா இந்த வாழ்வு? 

தொட்டிமீனாய் நமைக் கொட்டி வைத்திருக்கிறது செவ்வகச் சிறைக்குள் இந்த வாழ்க்கை. எப்படி மீள்வது இந்தச் சிரமச்சிறையிலிருந்து? எப்படி எப்போதும் மகிழ்வாயிருப்பது?

எல்லாவற்றையும் ரசியுங்கள்

எப்போதெல்லாம் நம் மனம் சோர்வடைகிறதோ அப்போதெல்லாம் நாம் ஏற்கனவே மகிழ்ச்சியாயிருந்த நிமிடங்களை நினைத்துப் பார்த்துக்கொள்ளலாம். 

தினமும் நாம் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்தாலும், சிலர் நம் மன அறைக்குள் தங்கள் செயல்களாலும் ரசனையாலும் நின்றுநிலைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

அவர்களில் சிலர் ரசித்து ருசித்து உணவருந்துவதைக் காணலாம், சிலர் தலையை ஆட்டியபடி கண்களை மூடி இன்னிசை கேட்பதைக் காணலாம்,

 சிலர் ஓடியாடி பயணப்பட்டுக் கொண்டே வாழ்வை ரசிப்பதைக் காணலாம், சிலர் வெகு சுவாரசியத்துடனும் அழகான வர்ணனைகளோடும் அனுபவித்து அனுபவித்துப் மேடைகளில் பேசுவதைக் காணலாம்,

வேறுசிலர் வண்ணவண்ண மீன்களை ரசித்து அவற்றோடு பேசியபடி நந்தவன நிமிடங்களைக் கழிப்பதில் மகிழ்ச்சியடைவதைக் காண்கிறோம்,

 சிலர் பூங்காவில் நடைபயின்றபடி நண்பர்களோடு சிரித்து மகிழ்ந்து நடப்பதைக்  காணமுடிகிறது. சிலர் காலை முதல் இரவுவரை நூலகத்தின் புத்தகப் பக்கங்களுக்குள் தன்னைத் தொலைத்து மகிழ்வதைக் காண்கிறோம். 

காதுகளில் வழியும் பண்பலை ஒலிபரப்போடு தங்கள் புதியநாட்களை அதிகாலைகளில் தொடங்கிக்கொண்டிருக்கும் அந்த சிலரில் இளையோரும் உண்டு!

 இந்தப் பட்டியல் போல் ஆயிரமாயிரமாய் தொடரும் மகிழ்வலைப் பட்டியலில் ஏதோவொரு பக்கத்தில் உங்கள் பெயரிருந்தால் நீங்களும் மகிழ்வர்தான். ரசித்து வாழ்தல் ஒன்றே சிரித்து மகிழும் வாழ்வின் அடையாளம்.

Comments